நானும் அந்தத் திசை நோக்கியே!
யாருக்கும் நான் ஒரு மகானாகவோ,மகாத்மாவாகவோ பிறக்கவில்லையே என்பதும் தன்னுடைய ஏக்கமாகவே இருந்தாலும் தன்னுடைய நோக்கமும் அதுவாகவே இருக்கிறபோதுதான் அவர் அந்நிலையை எட்டமுடிகிறது என்பதே சத்தியம்.ஆகவே நோக்கம் நோக்கி தரிசிப்பதும் அதற்கான பாதை தேடுதல்தான்.அப்படித்தான் மகான்களும்,மகாத்மாக்களும் உருவாகிறார்கள்.பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் பிறக்கும்போது தூய்மையான ஆத்மாவாகத்தான் அவதரிக்கிறான்.பிறக்கும் பிஞ்சின் மனம் பிறக்கும்போது அது ஒரு எழுதப்படாத காகிதம்.அது வளரும் சூழலில்தான் சமூக நிகழ்வுகள் மற்றும் சுய தேடல்கள் மூலம் பெறும் அனுபவங்கள்தான் அறிவுகளாக பதியப்பெறுகின்றது.அதாவது அவன் தன்னைச்சூழ்ந்துள்ள சமூகச்சூழலால் ஒரு குயவனின் எண்ணத்தின் வண்ணத்தில் கைவண்ணத்தின் பயிற்சியின் தீர்கத்தில் வளரும் பாண்டம்
போல் மாண்மை அடைவதும் கீழ்மை அடைவதும் அவன் விதியாகிறது.
ஆகவே ஒரு மனிதனின் ஆக்க மேன்மைக்கு சமூகச்சூழலின் பண்பட்ட அமைப்பும் குடும்பச்சூழலின் ஒழுக்குமுறை வாழ்வியல் பாதுகாப்பும் மிக மிக அவசியமாகிறது.பெற்றோரின் பிள்ளைகள் மீதான பொறுப்பும் கவனமும் கவனிக்கத்தக்கது.எந்த ஒரு சமூகமோ ,சமூகத்தில் ஒரு குடும்பமோ அமைதியும் ஒழுக்கமும் நிறைந்துள்ளதோ அந்த
ஒரு சமூகமும் அந்த சமூகத்தில் குடும்பமும் மேன்மையான குணசீலர்களை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.சில நேரங்களில் அபூர்வமாக அதிசயங்கள் நிகழ்வதும் உண்டு.
ஆமாம் மகாத்மா காந்தியடிகளும் ஒரு அதிசயம் என்றால் அது மிகையாகாது.
அவரை மகாத்மாவாக வளர்த்தது இந்தியாவின் இக்கட்டான அல்லது அவலமான சூழல்தான் என்றால் அதை யாராலும்மறுப்பதிற்கில்லை.
அப்போதிருந்த நமது தேசத்தின் சூழலும் சோதனை வேதனையும் அப்போது அவர் கண்ட அரிச்சந்திர நாடகக் காட்சிகளும் ஒன்றுக்கொன்று இணையாக அவர்தன் கண்முன்னே காட்சிகளாக ஓடி அவரின் சிந்தையை கிளரிவிட்டட்டன.அந்த பாதிப்புகளின் தாக்கம்தான் அவருடைய மனச்சாட்சி அவருக்குள்ளிருந்த மனித நேயத்தை ஞான ஒளியாக வெளிப்படுத்தி உணர்த்தியது. ஒரு சத்திய புருசனான அரிச்சந்திரன் தன் சத்தியத்தைக் காப்பாற்ற எந்த அளவிற்கு அவன்தன் சோதனையின் உச்சத்திற்கே சென்றானோ அந்த அளவிற்கு அண்ணலும் எண்ணற்ற சத்திய சோதனைகளைக் கடந்து நமது நாட்டின் மக்களை அந்நிய ஆதிக்கமெனும் அவலங்களிலிருந்து காப்பாற்றத் துணிந்தார்.அவரைத்துணியச்
செய்ததும் அந்த சத்திய அரிச்சந்திர நாடகமெனும் ஒரு அற்புதச்சூழல்தான் என்றே சரித்திரமும்ஒப்புக் கொண்டுதான் பெருமை அடைகிறது.
சிட்டுக்குருவிகளின் சொந்தக்காரர் எட்டையபுரத்துக்கவிஞர் பாரதியாரிடம் பாடம் பயின்று பாடிப்பறக்கும் ஆயிரக்கான சிட்டுகளில் அடியேனும் ஒருவன் என்று கூறிக்கொள்வதில்தான் கவிஞர்கள் இன்று பெருமை அடைகிறார்கள்.பாரதியாரும் பாரதிக்கு முந்திய வள்ளுவர் ஆகிய மானுடராக அவதரித்த மகான்கள் அனைவருமே அந்தந்தக் காலத்தின் சமூகச்சூழலின் அவசியத் தூண்டலின் தாக்கத்தின் விளைவாகத்தான் அற்புதங்களை நிகழ்த்தியுள்ளனர் என்பதையும் நாம் புரிந்துகொள்ளமுடிகிறது.நானும் அந்த திசை நோக்கியே வணங்குகிறேன்.
கொ.பெ.பி.அய்யா.